தமிழகம்

மதுரை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் காலமானார் - ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

செய்திப்பிரிவு

மதுரை: பிரபல தொழிலதிபரும் மீனாட்சி அம்மன் கோயில் தக்காருமான கருமுத்து தி. கண்ணன்(70) உடல் நலக்குறைவால் மதுரையில் நேற்று காலமானார்.

தென்மாவட்டங்களில் பெரும் தொழிலதிபராகத் திகழ்ந்தவரும் கலைத்தந்தை என அழைக்கப்பட்டவருமான கருமுத்து தியாகராசர் செட்டியார்-ராதா தம்பதியரின் மகன் கருமுத்து தி. கண்ணன். இவர் மதுரை கோச்சடையில் வசித்து வந்தார். திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரி, தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தலைவராகவும், கப்பலூரில் உள்ள தியாகராசர் நூற்பாலை இயக்குநராகவும் இருந்தார்.

மேலும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக 2006 முதல் தொடர்ந்து 18 ஆண்டுகளாகப் பதவி வகித்தார். 2009-ல் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் அபிமானத்தைப் பெற்றதால் ஆட்சிகள் மாறியபோதும் கோயில் தக்கார் பதவியில் தொடர்ந்தார்.

முந்தைய திமுக ஆட்சியில் மாநில திட்டக்குழு உறுப்பினராக இருந்தார். தற்போதைய இந்து சமய அறநிலையத் துறை உயர்நிலை ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளில் கருமுத்து தி.கண்ணன் பங்கேற்கவில்லை. மதுரை கோச்சடையில் உள்ள வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை காலமானார். இவருக்கு மகன் ஹரி தியாகராஜன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இவரது உடல் கோச்சடையிலுள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு, அமைச்சர்கள் உதயநிதி, பி.மூர்த்தி, கே.ஆர்.பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன், கனிமொழி எம்.பி., எம்எல்ஏக்கள் கோ.தளபதி (திருப்பரங்குன்றம்), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி.உதயகுமார், ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தலைவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி விவரம்:

ஆளுநர் ஆர்.என்.ரவி: கருமுத்து கண்ணன் மறைவு மிகுந்த வேதனை தருகிறது. சிறந்த கல்வியாளர், தொழிலதிபர் மற்றும் கொடையாளரான அவரது மறைவு சமுதாயத்திற்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தனது தந்தை காலத்தில் இருந்தே திமுக மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். நான் எப்போது மதுரை சென்றாலும் பாசத்தோடும் இன்முகத்தோடும் வரவேற்பார். பலருக்கும் உதவிகள் செய்த உயர்ந்த உள்ளம் கொண்ட கருமுத்து கண்ணனின் மறைவு பேரிழப்பு.

எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி: ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர். மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள சித்திரை வீதிகளை புனரமைப்பதிலும், செயற்கரிய அறசெயல்கள் பல செய்து நீங்கா புகழ்பெற்றவர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ஆலய திருப்பணிகளை திறம்படச் செய்தவரும், சிறந்த பண்பாளருமாகிய கருமுத்து கண்ணன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோன்று, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா, திருநாவுக்கரசர் எம்.பி., சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வ.பெருந்தகை, ஐஜேகே கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT