தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மது குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டாஸ்மாக் பாரில் தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் நேற்று சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் கீழஅலங்கத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் கடந்த 21-ம் தேதி காலை மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி(68), கார் ஓட்டுநர் விவேக்(36) ஆகியோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் விசாரிக்கின்றனர். அதில், அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மதுவில் சயனைடு கலந்தது எப்படி என்பது குறித்து 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத், கூடுதல் எஸ்.பி ஜெயச்சந்திரன், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் வட்டாட்சியர் தங்க.பிரபாகரன் முன்னிலையில் மண்டல தடய அறிவியல் துறை துணை இயக்குநர் ஜெயா தலைமையில், உதவி இயக்குநர் காயத்ரி மற்றும் கைரேகை நிபுணர்கள் நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அந்த பாரில் உள்ளபொருட்களில் தடயங்கள், கைரேகைகளை ஆய்வு செய்தனர்.
பின்னர், பாருக்கு எதிரே உள்ள மீன் மார்க்கெட்டில் குப்புசாமி, விவேக் ஆகியோரின் நண்பர்கள், சக மீன் வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர்.