ஒப்பந்த பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியை பி.எப். கணக்கில் செலுத்தாத மாநகராட்சியைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

ஒப்பந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.21 கோடி பிஎப் கணக்கில் செலுத்தாத தாம்பரம் மாநகராட்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தாம்பரம்: ஒப்பந்தத் தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை, பிஎப் கணக்கில் செலுத்தாத தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம் மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் இருந்து 2011 முதல் 2023-ம் ஆண்டுகளில் வருங்கால வைப்பு நிதியாக சுமார் ரூ.21 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அந்ததொகையை வருங்கால வைப்புநிதி கணக்கில் மாநகராட்சி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனை வருங்கால வைப்பு நிதியில் செலுத்த வேண்டும். தூய்மை பணியில் அவுட்சோர்சிங் முறையைகைவிட்டு, நேரடியாக தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும். தொகுப்பூதிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தாம்பரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்போராட்டத்துக்கு தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில்குமார், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், எம்.தாமு, தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர் சங்க (சிஐடியு) தலைவர் ராஜன்மணி, பொதுச்செயலாளர் கே.சி.முருகேன், சிஐடியு தலைவர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பி.ஜீவா பங்கேற்றனர்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து தாம்பரம் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில் தாம்பரம் நகராட்சியாக இருந்த 2011 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் செய்த ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் செய்த தொழிலாளர்கள், பராமரிப்பு பணிகள் மேற்கொண்டவர்கள், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி மேற்கொண்ட பணியாளர்கள் ஆகியோருக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதியாக ரூ.21கோடியே 9 லட்சத்து 8,621 செலுத்த தொழிலாளர் நல ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து நகராட்சி தொழிலாளர்நல முறை மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன்பேரில் வழக்கில் தொடர்புடைய தொகையில் 35% வைப்புத்தொகையாக தொழிலாளர் நலநிதிகணக்கில் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.

மேலும் இவ்வழக்கில் பகுதி தொகையாக ரூ.3.00 கோடி மட்டும் மாநகராட்சியால் ஜனவரி 2023-ல் மாநகராட்சி ஒப்பந்ததாரர் வைப்பு நிதியிலிருந்து செலுத்தப்பட்டது என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT