காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் சதீஷுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், திறமை வாய்ந்த இளைஞர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிப்பதன் மூலம், உலக விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் நிலைக்கு உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 20-வது காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி தான் சதீஷ்குமார் சிவலிங்கம் பங்கேற்கும் முதல் காமன்வெல்த் போட்டி ஆகும். முதல் போட்டியிலேயே தங்கப்பதக்கம் வென்றிருப்பது மட்டுமின்றி, ஸ்னாட்ச் பிரிவில் ஒரே முயற்சியில் 149 கிலோ எடை தூக்கி காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனையும் படைத்துள்ளார். இவர் இதற்கு முன் 2012 மற்றும் 2013 காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் பல பன்னாட்டுப் போட்டிகளிலும் சதீஷ்குமார் பங்கேற்று முத்திரை பதித்துள்ளார்.
வேலூர் சத்துவாச்சாரியில் ஏழைக்குடும்பத்தில் பிறந்து நகராட்சிப் பள்ளியில் படித்த சதீஷ்குமார், அப்பகுதியில் உள்ளவர்களும், பெற்றோரும், ஆசிரியர்களும் அளித்த ஊக்கத்தாலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் பயிற்சிக் கூடத்தில் கிடைத்தப் பயிற்சியாலும் இந்த சாதனையை சாத்தியமாக்கியிருக்கிறார். 22 வயதே ஆகும் சதீஷ்குமாருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தென்கொரியாவின் இன்சியோன் நகரில் தொடங்கும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் நடைபெறவுள்ள 31-வது ஒலிம்பிக் போட்டிகளிலும் மேலும் பல தங்கப்பதங்கங்களை வென்று உலக சாதனை படைக்க சதீஷ்குமாரை வாழ்த்துகிறேன்.
இதற்கு வசதியாக அவருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கவும், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் சதீஷ்குமாருக்கு ஊக்கப்பரிசு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
சதீஷ்குமாரைப் போலவே விளையாட்டுத் திறமையும், வலிமையும் கொண்ட ஏராளமான இளைஞர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிப்பதன் மூலம், திறமைகளுக்கு மெருகேற்றி உலக விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் நிலைக்கு உயர்த்த தமிழக அரசும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ராமாதாஸ் கூறியுள்ளார்.