டெல்லி: “நாட்டை பெருமைபடுத்த போராடுவதற்கு பதிலாக, தங்களின் சொந்த பாதுகாப்புக்காக போராடும் நிலைக்கு அவர்களை நிர்பந்தித்துள்ளோம்” என மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்ககதில், “மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. நாட்டை பெருமைபடுத்த போராடுவதற்கு பதிலாக, தங்களின் சொந்த பாதுகாப்புக்காக போராடும் நிலைக்கு அவர்களை நிர்பந்தித்துள்ளோம். சக இந்தியர்களே நம் கவனத்துக்கு உரியவர்கள் யார்? தேசிய விளையாட்டு வீரர்களா? அல்லது குற்ற வரலாற்றைக்கொண்ட அரசியல்வாதிகளா?” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடந்த மாதம் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23 முதல் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் போராட்டத்தை விவசாயிகளின் ஆதரவோடு அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முடிவில் மல்யுத்த வீராங்கனைகள் உள்ளனர் என்பதும், போராட்டம் இன்றுடன் ஒரு மாதத்தை எட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.