சென்னை: திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்பட்டது. பின்னர், முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடு குறித்து புகார் மனு அளித்தனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கடந்த2 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், திமுக ஆட்சி நிர்வாகத்தை கண்டித்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னை சின்னமலை வேளச்சேரி சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்கள் திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பின்னர், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி தொடங்கியது. பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். அனைவரும் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். 10 பேர் மட்டும் ஆளுநரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பழனிசாமி தலைமையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பெஞ்சமின், முன்னாள் எம்.பி. பாலகங்கா ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, திமுக அரசு மீதான புகார் மனுவை கொடுத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது:
சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை: ‘திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடு’ என்ற தலைப்பில் ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 23 கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. திமுக அரசின் திறமையின்மை, ஆளுங்கட்சியினரே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவதே இதற்கு காரணம். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரியுள்ளோம்.
போதைப் பொருள் நடமாட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையர்களால் கிராமநிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் மீது கொலை முயற்சி நடந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் சென்று செயின் பறிக்கும் நிலை மாறி, இப்போது காரில் சென்று செயின் பறிக்கின்றனர். முதியோரை குறிவைத்து நகை, பணத்துக்காக கொலைகள் நடக்கின்றன. கஞ்சா,போதைப் பொருள் நடமாட்டம் என்பது போன்ற சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து புகாரில் தெரிவித்துள்ளோம்.
முதல்வரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து குவித்திருப்பதாக, முன்னாள் நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, மத்திய முகமைகள் விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரியுள்ளோம்.
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கடந்த 2010 முதல் 2020 வரை ஆண்டுக்கு 2 படங்களை மட்டுமே தயாரித்து, விநியோகம் செய்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 50 படங்களை தயாரித்துள்ளது. இதன்மூலம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் நிதி ஆதாரம், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி திரையுலகையே கட்டுப்படுத்துவது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கட்டுமானம், மனை விற்பனையில் நாட்டிலேயே முன்னணி நிறுவனமாக ஜி ஸ்கொயர் நிறுவனம் மாறியுள்ளது. இதன்மூலம் அரசு கருவூலத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கணக்கில் வராத மதுபானங்களை மதுக்கூடங்களில் விற்பது மற்றும் விநியோகத்தால் கலால்வரி வருவாய் பாதிப்பு, சட்டவிரோத மதுக்கூடங்களால் இழப்புஎன அரசுக்கு மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் விசாரணை கோரியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.