சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிக்கு சிடி ஸ்கேன் எடுக்காமலேயே மற்றொருவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஊழியர்கள் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கணபதியேந்தலைச் சேர்ந்தவர் சாத்தையா (68). இவருக்கு கடந்த மே 11-ம் தேதி இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.
அங்கிருந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சாத்தை யாவை பரிசோதித்த மருத்துவர், சிடி ஸ்கேன் எடுத்து வருமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து சாத்தையா மருத்து வமனை சிடி ஸ்கேன் மையத்துக்கு சென்றார். ஆனால் அவரை அமர வைத்து, சிறிது நேரத்தில் சிடி ஸ்கேன் எடுத்துவிட்டதாகக் கூறி அனுப்பி வைத்தனர். அவரும் கட்டணமாக ரூ.500-ஐ செலுத்திவிட்டு வார்டுக்கு சென்றார்.
பின்னர், மருத்துவரை சந்தித்த சாத்தையா, சிடி ஸ்கேன் அறையில் தன்னை படுக்க வைத்து சோதனை எதுவும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர், சிடி ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கி வரச் சொல்லியுள்ளார்.
இதையடுத்து சாத்தையா மகன் நிருபன் சக்கரவர்த்தி ஸ்கேன் மையத்துக்கு சென்று மருத்துவப் பரிசோதனை அறிக்கையை வாங்கி வந்துள்ளார். அந்த அறிக்கையை பார்த்த மருத்துவர், வயிற்றில் எந்த பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளார்.
மருத்துவர் சென்றதும் சிறிது நேரத்தில் அங்கு வந்த ஸ்கேன் மைய ஊழியர்கள் சாத்தையாவை மீண்டும் அழைத்துச் சென்று, படுக்க வைத்து ஸ்கேன் எடுத் துள்ளனர்.
ஏற்கெனவே கொடுத்த ரிப்போர்ட் டையும் வாங்கிக் கொண்ட ஊழியர்கள், புதிய பரிசோதனை அறிக்கையை கொடுத்து அனுப்பினர். அந்த அறிக்கையை பார்த்த மருத்துவர், சாத்தையாவுக்கு குடலில் பிரச்சினை இருப்பதாகத் தெரிவித்தார். அப்போதுதான் ஏற் கெனவே வழங்கப்பட்டது மற்றொருவரின் சிடி ஸ்கேன் ரிப்போர்ட் என சாத்தை யாவுக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் நிருபன் சக்கரவர்த்தி, இது தொடர்பாக மே 12-ம் தேதி மருத்துவக் கல்லூரி டீன் சத்தியபாமாவிடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து நிருபன் சக்கரவர்த்தி கூறியதாவது: எனது தந்தைக்கு ஸ்கேன் எடுக்காமலேயே மற்றொருவரது மருத்துவ ரிப்போர்ட்டை கொடுத்துள்ளனர். இதே போல், யாருக்காவது தவறான ரிப்போர்ட் கொடுத்து சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்.
இதுகுறித்து டீனிடம் புகார் கொடுத்து 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினார். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் சத்தியபாமாவிடம் கேட்டபோது, புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறினார்.