ஊட்டியில் நடைபெறும் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க மதுரை மாவட்டத்திலிருந்து நேற்று புறப்பட்ட மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வென்ற மாணவர்கள்.   
தமிழகம்

மதுரை | கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஊட்டியில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊட்டியில் கோடை கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்களில் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க இன்று மதுரை மாவட்டத்திலிருந்து 25 மாணவ, மாணவிகள் 2 பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றவும், கோடைவிடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் மே 23 முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் ‘புதியன விரும்பு’ என்னும் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் ஊட்டி லாரன்ஸ் பள்ளி மற்றும் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இப்பயிற்சி முகாமில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ மாணவியர்களில் கல்வி, இலக்கியம், அறிவியல், கலை, தலைமைத்துவம், வினாடி வினா போட்டிகளில் வென்ற தமிழகம் முழுவதுமுள்ள 1100 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத்திருவிழா, மாநில அளவிலான வினாடி வினா இலக்கிய மன்ற போட்டிகளில் முதன்மை பரிசு பெற்ற 25 மாணவ, மாணவிகள் இன்று முகாமிற்கு புறப்பட்டு சென்றனர்.

முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கந்தசாமி ஒருங்கிணைப்பில் 2 பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். இம்முகாமில் 56 கலை பயிற்றுநர்கள் 14 வகையான கலைகள் குறித்து பயிற்சி அளிக்கவுள்ளனர். இதில், உதவி மாவட்ட திட்ட அலுவலர்கள் சரவணன் முருகன், கார்மேகம், மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேம் நேவிஸ் உடனிருந்தனர்.

-

SCROLL FOR NEXT