கிருஷ்ணகிரி: கல்வி, சுகாதாரம், கிராமங்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தியும், அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட புதிய ஆட்சியர் சரயு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 12வது ஆட்சியராக தீபக் ஜேக்கப், கடந்த பிப்.6ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்று 99 நாட்களான நிலையில், கடந்த 16ம் தேதி, தஞ்சாவூர் ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட புதிய ஆட்சியராக சரயு நியமிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 13-வது ஆட்சியராக சரயு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன், அவரது குடும்பத்தினரும் நேற்று ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர்.
2வது பெண் ஆட்சியர்: கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த சரயு, கடந்த 2015-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். புதுக்கோட்டை துணை ஆட்சியர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர், பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் இணை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தநிலையில், கிருஷ்ணகிரி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 2-வது பெண் ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலைகிராமங்களில்... - இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஆட்சியர் சரயு, கூறியது: ''மலைகள் சூழ்ந்த, தொழிற்சாலைகள், விவசாய வளம் நிறைந்த மாங்கனி நகர் கிருஷ்ணகிரிக்கு ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடையும் வகையில், அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.
இதற்கு முன் இம்மாவட்டத்தின் ஆட்சியராக பணிபுரிந்த தீபக் ஜேக்கப் கல்லூரியில் எனக்கு சீனியர் ஆவார். அவர் மாவட்டத்தை பற்றிய குறிப்புகளை வழங்கியுள்ளார். கல்வி, சுகாதாரம், கிராமங்களின் வளர்ச்சி உள்ளிட்டவைக்கு முக்கியத்தும் அளித்து, அதிக கவனம் செலுத்தப்படும். மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்.'' இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் சரயுவுக்கு டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி, ஆட்சியரின் உதவியாளர் வேடியப்பன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.