பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

காவலர் முதல் டிஜிபி வரை ஒரே அடையாளமாக விளங்கும் குடியரசு தலைவரின் வண்ணக் கொடி ‘லோகோ’வுக்கு ரூ.1 கோடி நிதி

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சிறப்பாக பணியாற்றியதன் அடிப்படையில், தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான லோகோவை காவலர் முதல் டிஜிபி வரை வழங்க, தமிழக காவல் துறைக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்காக சிறப்பாக சேவையாற்றும் முப்படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் மாநிலங்களில் உள்ள காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்பு படைகளை கவுரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் வண்ணக் கொடி வழங்கப்படுகிறது.

அதன்படி, நாட்டின் பாதுகாப்புக்காக சிறப்பாக பணியாற்றிய 9 மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உயரிய விருதான குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி தமிழக காவல் துறைக்கு கடந்த ஜூலை 31-ம் தேதி வழங்கப்பட்டது.

முதல்வரிடம் ஒப்படைப்பு

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக காவல் துறைக்கான குடியரசுத் தலைவரின் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஒப்படைத்தார். இதையடுத்து, அந்த கொடியை, டிஜிபி சைலேந்திர பாபுவிடம் முதல்வர் வழங்கினார்.

இதையடுத்து, இந்த வண்ணக் கொடிக்கான சின்னமும் (லோகோ) தமிழக காவல் துறைக்கு வழங்கப்பட்டது.

பெருமை பெற்ற தமிழகம்

இதனால், தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடியைப் பெற்ற மாநிலம் என்ற பெருமையை தமிழக காவல் துறை பெற்றது.

இதன்மூலம், குடியரசுத் தலைவர் வண்ணக் கொடியின் சின்னத்தை தமிழக காவல் துறையில் காவலர்கள் முதல் டிஜிபி வரை அனைவரும் தங்கள் சீருடையில் அணிந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, போலீஸார் தங்கள் சொந்த செலவில் அந்த சின்னத்தை வாங்கி அணிந்து வருகின்றனர்.

இந்நிலையில், போலீஸாருக்கு இந்த லோகோவை வழங்குவதற்காக தற்போது தமிழக காவல் துறைக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் 3 மாதங்களில் தமிழக போலீஸார் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் வண்ணக் கொடியின் லோகோ அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டிலேயே குடியரசுத் தலைவரின் கொடியைப் பெற்ற 5-வது மாநிலம், தென்னிந்தியாவில் முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. இது காவல்துறைக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கே கிடைத்துள்ள பெருமை.இந்த விருதுக்கான ‘லோகோ’வை அனைத்து போலீஸாருக்கும் வழங்க தற்போது ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் 3 மாதங்களுக்குள் தமிழக காவல் துறையை சேர்ந்த அனைவருக்கும், குடியரசுத் தலைவர் வண்ணக் கொடியின் லோகோ அரசு சார்பில் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT