அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புல்லாநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெரியகிருஷ்ணன் மகன் பெருமாள்(28). இவரது சித்தப்பா சின்னகிருஷ்ணனின் மகன் விஜய்(27). இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள்.
நேற்று முன்தினம் மாலை ஆடுகளை மேய்ப்பதற்காக ராணிசேதுபுரத்துக்குச் சென்றனர். அதன் பின்பு இருவரும் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் உறவினர்கள் தேடினர்.
இந்நிலையில், பெருமாளும், விஜய்யும் ராணிசேதுபுரம் காட்டுப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது நேற்று காலை தெரியவந்தது.
பரளச்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தபோது பெருமாளும், விஜய்யும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாகத் தெரியவந்தது. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.