தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை அருந்திய 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் கீழவாசல் படைவெட்டி அம்மன் கோயில் தெருவைசேர்ந்தவர் குப்புசாமி(68). மீன் வியாபாரி. இவர் நேற்று காலை 11 மணியளவில் மீன் மார்க்கெட் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். ஆனால், மதியம் 12 மணிக்குதான் மதுக்கடை திறக்கும் என்பதால், அதன் அருகில் செயல்படும் பாருக்குச் சென்று அங்கு சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி அருந்திவிட்டு, மீன் மார்க்கெட்டுக்கு வியாபாரம் செய்யச் சென்றார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் திடீரென வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்தார்.
அவரது மனைவி காஞ்சனா தேவி மற்றும் உடன் இருந்தவர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதனிடையே, தஞ்சாவூர் பூமான் ராவுத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநரான குட்டி விவேக் (36) என்பவரும், அதே பாருக்குச் சென்று மது அருந்திவிட்டு வெளியே வந்தார். அப்போது, அவரும் திடீரென மயங்கி விழுந்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
பாரில் மது அருந்திய 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை முன் திரண்டு, மதுக்கடை, பாரை மூடக் கோரி முழக்கமிட்டனர். அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அதன்பின், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கலால் அதிகாரி பழனிவேல், வட்டாட்சியர் சக்திவேல், டாஸ்மாக் வட்டாட்சியர் தங்கபிரபாகரன் ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது பாரில் விற்பனை செய்யப்பட்டது போலி மதுபானமா என்பது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
2 பேர் கைது: அப்போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், டாஸ்மாக் மேற்பார்வையாளர் முருகனை தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், அங்கிருந்த டாஸ்மாக் வட்டாட்சியர் தங்க பிரபாகரனை, டாஸ்மாக் கடைக்குள் வைத்துப் பூட்ட முயன்றனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பின்னர், அந்த டாஸ்மாக் கடை, பாரை போலீஸார் பூட்டி சீல் வைத்தனர். மேலும், அந்த பகுதியை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளரான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பழனிவேல் , ஊழியர் காமராஜ் ஆகியோரை தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்துகாவல் ஆய்வாளர் கருணாகரன் கூறும்போது, இது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மதுபானத்தில் சயனைடு: இதற்கிடையில், உயிரிழந்தவர்கள் அருந்திய மதுபானத்தில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்துள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூறினார். இது தொடர்பாக அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறும்போது, “மதுபான மாதிரியை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியதில், அதில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது” என்றார்.