தமிழகம்

ஊராட்சி செயலர் பணி விதிகளை அரசாணையாக வெளியிட வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ஊராட்சி செயலர்களின் பணி விதிகளை அரசாணையாக வெளியிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஊராட்சி செயலர்களை நியமிக்கும் அதிகாரம் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் தடையாணை பெற்றதோடு, இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஊராட்சி செயலர்களை ஊராட்சி மன்றம் மூலம் நியமனம் செய்யக் கூடாது என 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஊராட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஊராட்சிசெயலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டுமென 6-வது மாநில நிதி ஆணையமும் பரிந்துரைத்து உள்ளதாகவும், ஆனால் பணி விதிகள் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு இன்னும் வெளியிடவில்லை என்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அவர்களின் பணி விதிகள் குறித்த அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT