தமிழகம்

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்: முதல்வர் கவனம் செலுத்த வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி மறுக்கப்படும் விவகாரத்தில் முதல்வர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் (சென்னை மண்டலம்) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள 90 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம்முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அரசும், ஓய்வூதிய நிதி அறக்கட்டளையும் மேல் முறையீடு செய்து தீர்ப்புக்கு தடை பெற்றுள்ளது. இந்த வழக்கு முடிவுக்கு வராத நிலையில், இத்துடன் வேறு வழக்கையும் சேர்த்து மேலும் காலதாமதப்படுத்தும் நோக்கில் அரசு செயல்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த பிரச்சினையில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும். மேல்முறையீட்டை திரும்பப் பெற்று, முந்தைய நீதிமன்ற தீர்ப்பின்படி அகவிலைப்படி உயர்வை விரைவில் வழங்க முதல்வர் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT