கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில், பட்டினம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடமாக, கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ் வரையில் (26.1 கி.மீ.) மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் இரு தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் சுமார் 4 கி.மீ. தொலைவில் 2 சுரங்கப்பாதைகள் அமைய உள்ளன. இரண்டையும் கருத்தில் கொண்டு சுமார் 16 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப்பாதை முழுவதையும் தோண்டுவதற்கு 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
சுரங்கப்பாதை பணிகள் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், பல இடங்களில் ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில், பட்டினம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக, அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, கட்டுமான பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை செயல்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறுகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
பட்டினம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது கைவிடப்பட்டுள்ளதால், கலங்கரை விளக்கத்தை அடுத்த மெட்ரோ ரயில் நிலையம் கச்சேரி சாலையில் அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.