இளையான்குடி: இளையாங்குடி அருகே சாலைக் கிராமத்தில் ஆளும்கட்சியினர் ஆதரவோடு திறந்தவெளியில் மது பானங்களை விற்பனை செய்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் பேருந்துநிலையம் அருகே அரசு மதுக்கூடத்துடன் கூடிய டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இவை திறக்கப்படும் நேரத்தைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் மதுக்கூடத்தையொட்டி அதை ஏலம் எடுத்தவர்களே திறந்தவெளியில் கொட்டகை அமைத்து மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், திறந்தவெளி மது விற்பனை தொடர்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் அவர், ‘மதுக்கூடத்தை நடத்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு ரூ.58,000 தரப்பட்டுள்ளது. மேலும் பல ஆயிரம் ரூபாயை காவல்துறையினர் உள்ளிட்ட பலருக்கும் மாமூலாக தருகிறோம். இதனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் மதுக்கூடத்தை நடத்தினால் நஷ்டம் ஏற்படுகிறது. இதை ஈடுகட்ட இப்படி கடைக்கு வெளியே மதுபானம் விற்பனை செய்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்படாத நேரத்தில் மதுபானங்களை மறைமுகமாக விற்று வந்த நிலையில், தற்போது பகிரங்கமாகவே திறந்தவெளியில் மதுபானங்களை விற்பனை செய்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.