மதுரை: நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து பழனிவேல் தியாகராஜன் வேறு துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரது தீவிர ஆதரவாளர் மிசாபாண்டியன் கட்சி யிலிருந்து தற்காலிக நீக்கம் செய் யப்பட்டுள்ளது மதுரை திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர திமுக முன்னாள் அவைத் தலைவராக இருந்தவர் மிசா பாண்டியன். இவர் முன்பு மாநகராட்சி துணை மேயராகவும் பதவி வகித்தார். முதலில் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்த அவர், பின்பு திமுகவி லிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்.
பின்னர் மீண்டும் திமுகவுக்கு தாவிய மிசா பாண்டியன் மு.க.ஸ்டாலினின் ஆதரவாளராக இருந்தார். தற்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளராக உள்ளார்.
மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற மிசா பாண்டியனின் மனைவி பாண்டிச்செல்விக்கு மத்திய மண்டல தலைவர் பதவியை பழனிவேல் தியாகராஜன் பெற்றுக் கொடுத்தார்.
மண்டலத் தலைவராக பாண்டிச்செல்வி இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக மிசா பாண்டியன்தான் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வுக்குச் சென்று வந்ததாக புகார் எழுந்தது.
மேலும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு வந்ததாகக் கூறப் படுகிறது. இவரது தலையீட்டால் திமுக கவுன்சிலர்களே அதிருப்தி அடைந்து வந்தனர்.
மாநகராட்சி மற்றும் மண்டலக் கூட்டங்களில், மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு பிரச்சினைகள் குறித்து பேசும் கவுன்சிலர்களை மிசா பாண்டியன் கண்டித்து வந்துள்ளார்.
54-வது வார்டு திமுக கவுன்சிலர் நூர்ஜஹான் தனது வார்டு பிரச்சினை குறித்து பேசியபோது, அவரை மிசா பாண்டியன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கவுன்சிலர் நூர்ஜகான் மாநகர் மாவட்ட திமுக, மாநகராட்சி ஆணையர் காவல் துறை ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்தார்.
அதேநேரத்தில் மிசா பாண்டியன், நூர்ஜஹான் தரப்பில் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். உள்கட்சி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், மிசா பாண்டியனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரது தீவிர ஆதரவாளரான மிசா பாண்டியனை தற்காலிக நீக்கம் செய்து கட்சித் தலைமை அறி வித்துள்ளது அக்கட்சி யினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், இந்த விவகாரத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன்னை காப்பாற்றுவார் என்று மிசா பாண்டியன் நினைத்தார். ஆனால், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகர திமுக செயலாளராக கோ.தளபதி வந்த பின்பு கட்சி விவகாரங்களில் தலையிடாமல் இருந்து வருகிறார்.
மேலும், அண்மையில் அவரது துறை மாற்றப்பட்ட நிலையில், அவரால் கட்சித் தலைமையை மிசா பாண்டியனுக்காக நேரடியாக அணுக முடியவில்லை என தெரிகிறது. மிசா பாண்டியனின் மனைவி பாண்டிச்செல்வி வகிக்கும் மண்டலத் தலைவர் பதவிக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.