சென்னை: பணிநிரந்தரம் செய்யக் கோரிசென்னை டிபிஐ வளாகத்தில் இன்றுமுதல் (மே 22) தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பகுதிநேர ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது: அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்தும் இன்னும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம். மே மாதம் சம்பளம் வழங்கப்படாததால் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம். எங்களை நம்பியுள்ள குடும்பத்தின் நிலையையும் முதல்வர் பார்க்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்து அவர்கள் வாழ்வில் விடியல் தர வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை (இன்று) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.