நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமித்தல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர்.படம்: ம.பிரபு 
தமிழகம்

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அரசு மருத்துவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுமருத்துவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 100-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பங்கேற்ற ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நேற்று நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு மருத்துவர்கள் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய உயர்வுக்காக பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மீண்டும் போராட்டத்தை அறிவித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ன் படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசு மருத்துவர்களை பிரித்து உயர்வு, தாழ்வு கற்பிக்கும் சமூக அநீதி அரசாணை 293-ஐ கைவிட வேண்டும். முதுநிலை மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு வழங்க தனி அரசாணை வெளியிட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT