தமிழகம்

மாவட்ட நீதிபதிகள் 4 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: மாவட்ட நீதிபதிகள் 4 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தலைமைப் பதிவாளராக பணியாற்றி தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஆர்.சக்திவேல், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராக பணியாற்றி வரும் மாவட்ட நீதிபதி பி.தனபால், ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராக பணியாற்றி தற்போது சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியாக பதவி வகித்து வரும் சி.குமரப்பன்,

ஏற்கெனவே மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராக பணியாற்றி தற்போது கோவை மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி வகித்து வரும் கே.ராஜசேகர் ஆகிய 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் 4 பேரும் வரும் மே 22 அன்று பதவியேற்பர் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது.

SCROLL FOR NEXT