சென்னை: சென்னையில் தரமில்லா குடிநீர் கேன்களை விநியோகம் செய்த 6 நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோடை வெயில் அதிகரித்து வரும்நிலையில், குடிநீர் கேன்களின் மூலம்குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீர் கேன்கள் பல இடங்களில் தரமின்றி இருப்பதாகவும், வழங்கப்படும் குடிநீர் தரமற்று இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சென்னை கொண்டித்தோப்பு, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், 17 குடிநீர் கேன்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், சென்னை மாநகராட்சியின் அதிகாரிகள் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதில், ஐஎஸ்ஐ தர சான்றிதழ் உரிமம் பெறாமல் செயல்பட்ட 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் தரமற்ற முறையில் குடிநீரை விநியோகம் செய்வது மற்றும் கேன்களை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் விநியோகிப்பது உள்பட பலவழிமுறைகளை பின்பற்றாத இதர கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் இக்கடைகளில் இருந்துகுடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு, குடிநீர் தரமில்லை என்பது உறுதி செய்யப்பட்டால், இக்கடைகளுக்கும் சீல் வைத்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.