சைபர் செக்யூரிட்டி ஹேக்கத்தான் போட்டியை விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவ ல் ஆணையர் சி.மகேஸ்வரி, துணை ஆணையர்கள் நாகஜோதி, மீனா , ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிவைத்தனர் . அருகில், விஐடி கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், டீன் ஆர்.கணேசன் ஆகியோர் உள்ளனர் . படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

சைபர் செக்யூரிட்டி ஹேக்கத்தான் இறுதி போட்டி தொடங்கியது: 105 அணிகள் பங்கேற்பு; சென்னையில் இன்று மாலை நிறைவு விழா

செய்திப்பிரிவு

சென்னை: விஐடி, சென்னை மாநகர காவல்துறை சார்பில் சைபர் செக்யூரிட்டி ஹேக்கத்தான் இறுதிப் போட்டி சென்னையில் தொடங்கியது. இதில் 105 அணிகள் பங்கேற்றுள்ளன.

விஐடி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகம் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சைபர் செக்யூரிட்டி ஹேக்கத்தான் இறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கின. இப்போட்டிகளை விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர்கள் நாகஜோதி, மீனா, ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இதில் ஜி.விசுவநாதன் பேசும்போது, ‘‘உலக அளவில் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதோடு, சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதை மனதில் கொண்டு, இந்திய இளைஞர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாக பயன்படுத்தி சைபர் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். கடந்த2019-ல் உலக அளவில் 800 கோடி சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. சைபர் குற்றங்களை தடுக்க 260 மில்லியன் அமெரிக்க டாலர்செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுக்க தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும்’’ என்றார்.

கூடுதல் ஆணையர் மகேஸ்வரி பேசியபோது, ‘‘சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு சைபர் குற்றங்கள் நடைபெறுவதால், அவற்றை தடுப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டில் சைபர் குற்றங்கள் தொடர்பாக சென்னையில் 10,835 புகார்கள் உட்பட தமிழகம் முழுவதும் 60,092 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சென்னையில் இந்த ஆண்டு 2,931 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

தொடக்க விழாவில் விஐடி சென்னை வளாக கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், கணினிஅறிவியல் துறை டீன் ஆர்.கண்ணன், பேராசிரியைகள் வள்ளிதேவி, சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சைபர் செக்யூரிட்டி ஹேக்கத்தான் போட்டியில் 105 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியின் நிறைவு விழா இன்று (மே 20)மாலை நடைபெறுகிறது. வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசுகளை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்குகிறார். முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.30 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT