சோழ மாமன்னன் ராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1,000-வது ஆண்டு விழாவையொட்டி, தஞ்சை பெரிய கோயிலில் இருந்து கங்கைகொண்ட சோழ புரத்துக்கு தொடர் தீப ஓட்டம் வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டது.
தீப ஓட்டத்தைப் பின் தொடர்ந்து ஆயிரம் மோட்டார் சைக்கிள்களில் சென்று, தஞ்சை எல்லை வரை வழியனுப்பும் ஊர்வலமும் நடை பெற்றது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய ராசராச சோழனைப் போலவே, அவரது மகன் ராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழ புரத்தில் பெருவுடையார் கோயிலைக் கட்டினார். இந்தக் கோயில் ஐக்கிய நாடுகள் அமைப்பால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி, கடல் கடந்து சென்றும் பல நாடு களை வென்ற ஒரே இந்திய மன்னனான ராசேந்திர சோழனுக் குப் பெருமை சேர்க்கும் வகையில், அவர் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள பெருவுடையார் கோயிலில் ஜூலை 24, 25-ம் தேதிகளில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தஞ்சை பெரிய கோயில் வளாகத்திலிருந்து தொடர் தீப ஓட்டம் மற்றும் ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் ஊர் வலத்தை வெள்ளிக்கிழமை காலை ஆட்சியர் என்.சுப்பையன் தொடங்கி வைத்தார். எழுத்தாளர் பாலகுமாரன் தீபச்சுடரை ஏற்றி வைத்தார்.
தீப ஓட்டத்தைப் பின் தொடர்ந்து சென்ற மோட்டார் சைக்கிள் ஊர்வலம், தஞ்சை பெரிய கோயிலில் இருந்து மேல வீதி, வடக்கு வீதி, கரந்தை, பள்ளி அக்ரஹாரம் வழியாக திருவை யாறு புறவழிச்சாலை வரை சென்றது. அங்கு தீப ஓட்டத்தை வழியனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய தேசிய பாரம்பரிய கலை கலாச்சார அறக்கட்டளையின் தஞ்சை கிளை கவுரவச் செயலர் முத்துக்குமார், விவசாய சங்க நிர்வாகி மணி மொழியன், பொறியாளர் கோமகன், வேளாண் தொழில்நுட்ப ஆலோசகர் பழனியப்பன் மற்றும் பொதுமக்கள், கல்லூரி மாணவர் கள் பங்கேற்றனர்.
இந்த தீபத்தைக் கொண்டு வெள்ளிக்கிழமை மாலை கங்கை கொண்ட சோழபுரத்தில் 1,000 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது.