சென்னை: கோடை வெயிலின் உக்கிரத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் களப் பணியில் உள்ள அனைத்துபோக்குவரத்து போலீஸாருக்கு வெப்பத்தைத் தடுக்கும் தெர்மாகோல் தொப்பியை அணிந்து பணியாற்ற வேண்டும் எனப் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் உத்தரவிட்டுள்ளார்.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் சுமார் 104 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. அதோடு மட்டும் அல்லாமல் அனல் காற்றும் வீசுகிறது. இதனால் அனைத்து தரப்புமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள சென்னை போக்குவரத்து போலீஸார் 2,500 பேருக்கு தினமும் காலை, மாலை வேளைகளில்குளிர்ச்சியான மோர் வழங்கப்பட்டு வருகிறது. கோடைக்காலம் முடியும்வரை மோர் வழங்கப்படும்.
இந்நிலையில், களப் பணியில்உள்ள போக்குவரத்து காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை, கோடை வெயில் வெப்பத்தைத் தடுக்கும் வகையில் தெர்மாகோலினால் ஆன தொப்பியை அணிய வேண்டும் எனப் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து களப்பணியில் உள்ள அனைத்து போக்குவரத்து போலீஸாரும் தெர்மாகோல் தொப்பியை அணிந்து பணியாற்றுகின்றனர். தெர்மாகோல் தொப்பி இல்லாதவர்களுக்கு அந்த தொப்பியை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ``கோடை வெயில் தாக்கத்தால் காவல்துறையினரின் இயல்பான உடல் வெப்பநிலை உயர்ந்து விடுகிறது. இதனால் உடலில் நீர் வற்றி, உடல்நலக் குறைவு மற்றும் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் வகையில் மோர் வழங்கப்படுகிறது. மேலும், வெப்ப தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள தெர்மாகோலினால் ஆன தொப்பியும்வழங்கப்பட்டுள்ளது. அதைக் கோடைகாலம் முடியும்வரை அனைவரும் கட்டாயம் அணிந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்'' என்றனர்.