சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம், வைகோ ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: அதிமுக அரசின் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மூலமாக இன்றைக்கு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் உறுதி செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
"ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று சட்டமன்றம் அறிவித்துள்ள நிலையில், நீதித்துறை மாறுபட்ட கருத்தை எடுக்க முடியாது” என்கிற அஇஅதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றத்தின் கருத்தை வரவேற்பதுடன், நமது கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற அஇஅதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பல்வேறு முறை வலியுறுத்தியதன் காரணமாகவும், கழக ஆட்சிக்குப் பின்னரும் அஇஅதிமுக தன்னையும் மனுதாரராக இணைத்துக் கொண்டு எடுத்த அனைத்து சட்டபோராட்டங்களுக்கும் துணை நின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக மிகப் பெரிய அளவில் போராட்டம் தமிழகத்தில் நடைபெற்றதையடுத்து, பிரதமரின் முழு ஒத்துழைப்புடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் துரிதமான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2017ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) அவசரச் சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டின் கலாச்சார மரபுரிமையை நிலைநாட்டிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.
இந்தச் சட்டத்தையும் எதிர்த்து, பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இதனை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என்பது தமிழகத்தின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்றும், தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்தத் தருணத்தில், 2017 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டமுன்வடிவினை முதல்வர் என்ற முறையில் முன்மொழியும் வாய்ப்பினை வழங்கிய ஜெயலலிதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தீர்ப்பு தமிழகத்தின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி. இதனை நான் தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அமர்வு வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு தொடர்பாக, ‘தமிழக அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறி உள்ளது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், “ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். இதன் மூலம் தமிழகத்தின் பண்பாட்டு மரபு நிலைநாட்டப்பட்டு இருக்கிறது.