தமிழகம்

கள்ளச்சாராய கடத்தல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புதுச்சேரியில் பொதுநல அமைப்புகள் போராட்டம்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: கள்ளச்சாராயம் கடத்தலுக்கு கலால்துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளதாகக் குற்றம்சாட்டி, ஆளுநர் தமிழிசை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி முதல்வர் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ தலைமையில் பொதுநல அமைப்புகள் கலால்துறையை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த கள்ளச்சாராயம் புதுச்சேரி பகுதியில் இருந்துதான் தமிழகத்துக்கு கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. புதுச்சேரி கலால்துறை மெத்தனப்போக்கால்தான் புதுச்சேரி கள்ளச்சாராய சந்தையாக உருவெடுத்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு வரும் வருவாய் கிடைக்காமல் போகிறது எனவும் கலால்துறையைக் கண்டித்து முதல்வர் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் சார்பில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவித்திருந்தனர்.

இதற்காக கொக்கு பார்க்கில் நேரு எம்எல்ஏ தலைமையில் பொதுநல அமைப்புகள் இன்று ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக வந்தனர். கலால்துறை அருகே போலீஸார் பேரிகார்டு அமைத்து தடுத்தனர். அதையடுத்து முற்றுகை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் ஸ்ரீதர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சுகுமாரன், வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், மனித உரிமைகள் அமைப்பு முருகானந்தம், தமிழர் களம் அழகர், பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். கலால்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ நேரு கூறியதாவது: "புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு அதிகளவில் போலி மதுபானம் கடத்தப்படுவது தொடர்பாக தலைமைச்செயலர், ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை கடிதம் தந்துள்ளேன். எரிசாராயம் கடத்தல் மற்றும் போலி மதுபானத் தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கூறி வருகிறேன். ஆனால், கலால்துறை அதிகாரிகள் கடத்தலுக்கு துணை போகிறார்கள். எரிசாராயம் மற்றும் போலி மதுபான கடத்தலால் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

முக்கியமாக கலால்துறை ஆணையர் பொறுப்பு வகிக்கும் ஆட்சியர், கலால்துறை துணை ஆணையர் ஆகியோர் இதில் கடத்தப்படும் எரி சாராயம் மற்றும் போலி மதுபானம் யாருக்கு சொந்தம் எனத்தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறார்கள். இதில் கடத்தல்காரர்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்துக்கு பல வழிகளில் கடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். இக்குற்றப்பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என எம்எல்ஏ நேரு கூறினார்.

SCROLL FOR NEXT