தமிழகம்

திமுக ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் கொழுத்துவிட்டனர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: திமுக ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் கொழுத்துவிட்டனர் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவில் பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் தோல்வியடைந்ததாக வைத்திலிங்கம் கூறுகிறார். அவர்களால்தானே தோல்வியடைந்தோம். அதிமுகவின் ரகசியங்களை திமுகவுக்கு கசியவிட்டு, அதனால் அவர்கள் சில வியூகங்களை வகுத்து வெற்றியடைந்துள்ளனர்.

மேலும் வைத்திலிங்கம் அமைச்சராக இருந்தபோது ஒரு மென்பொருள்நிறுவனத்திடம் ரூ.18 கோடி கேட்டார். இது தொடர்பான மின்னஞ்சல் சிக்கியுள்ளது. இதில் இருந்துதப்பவே திமுகவின் மற்றொருஅணியாக அவர் செயல்படுகிறார்.

திமுக ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் கொழுத்து போயிருக்கின்றனர். கோடி கணக்கில் சேர்த்து வைத்துள்ள கள்ளச்சாராய வியாபாரிகளிடம் இருந்து நிவாரணத் தொகையை வசூலித்து கொடுப்பதை விடுத்து,அரசின் வரிப்பணத்தில் இருந்துநிவாரணத் தொகை கொடுக்கப்படுகிறது.

கோவையில் காரில் வந்துசங்கிலி பறிப்பு சம்பவம், நாமக்கல்லில் தொடர்ச்சியாக பிரச்சினை நடைபெறுகிறது. இதன் மூலமேஅரசின் நிர்வாக திறன் தெரிகிறது. பல்வீர் சிங் மீதான விசாரணை மேற்கொண்ட அதிகாரி அமுதாவைஉள்துறை செயலராக நியமித்துள்ளனர். இனி விசாரணை முறையாக நடக்குமா. இவ்வாறுஅனைத்திலும் முரண்பாடு இருக்கிறது.

விசிக பிரமுகர் தாசில்தாரை மிரட்டுகிறார். கூட்டணி கட்சி, ஆளும் கட்சி என அனைவராலும் சட்ட ஒழுங்கு மோசமடைந்துள்ளது. சிறந்த ஆட்சி என பிம்பம் உருவாக்கப்படுகிறது. கள்ளச்சாராய விவகாரத்துக்கு எதிரான போராட்டம் உள்ளிட்டவை குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்வார்.

திருமாவளவன் பேசுவதை பார்க்கும்போது திமுகவுடன் கூட்டணியில் இருக்க அவருக்கு பிடிக்கவில்லை. பேனா நினைவுச் சின்னத்தில் அரசியல் செய்ய என்னஇருக்கிறது. ஏராளமான கோப்புநிலுவையில் இருந்தபோது இதற்கு மட்டும் எப்படி மத்திய அரசு அனுமதி கொடுத்தது. கெஞ்சியே அனுமதி பெற்றுள்ளனர்.

இதற்கெதிரான உச்ச நீதிமன்ற வழக்கில் நாங்களும் சேர்ந்துள்ளோம். நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு அமைக்கும் சிலை திமுகவின் கொடுங்கோன்மையான ஆட்சியையே நினைவுபடுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT