ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 4 ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசியல் தலையீடுகளும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் 16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ், நாகபட்டினம் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் இணை ஆணையராக பணியாற்றிய பி.விஷ்ணு சந்திரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, ராமநாதபுரம் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். 2015-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான இவர், பயிற்சி உதவி ஆட்சியராக பணியை தொடங்கி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய இடங்கில் சார் ஆட்சியராகவும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
2 ஆண்டுகளில் 4 ஆட்சியர்கள்: 2021 தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து, திமுக அரசு 07.05.2021-ல் பொறுப்பேற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் 15.11.2020-ல் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 8 மாதங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
அதனையடுத்து 17.06.2021-ல் சந்திரகலா புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 4 மாதங்களே பணியாற்றிய நிலையில் அவர் மருத்துவ விடுப்பில் சென்றதால், 15.10.2021-ல் சங்கர்லால் குமாவத் ராமநாதபுரம் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 8 மாதங்களே பணியாற்றிய இவரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, 17.06.2022-ல் ஜானி டாம் வர்கீஸ் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
11 மாதங்களே பணியாற்றிய இவர் நேற்று முன்தினம் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, பி.விஷ்ணு சந்திரன் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு பணியாற்ற வந்த 4 ஆட்சியர்களும் தொடக்கத்தில் ராமநாதபுரத்தை வளர்ந்த மாவட் டமாக மாற்ற வேண்டும், இங்குள்ள மக்களுக்கு அரசின் திட்டங்களை நன்கு செயல்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டனர்.
இதில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை தவிர, மற்ற 3 ஆட்சியர்களின் செயல்பாடுகள் குறைந்து கொண்டே சென்றது. அவர்கள் இந்த மாவட்டத்தைவிட்டு வேறு பணிக்குச் சென்றுவிடலாம் என்ற மனநிலைக்கு தள்ளப் பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு அரசியல் தலையீடுகள்தான் காரணம் என அதிகாரிகள், அலுவலர்களால் பகிரங்கமாக பேசப்பட்டது. குறிப்பாக திமுக மாவட்டச் செயலாளரும், மாவட்ட அமைச்சரும் அவர்களுக்குள் உள்ள போட்டியை, ஈகோவை ஆட்சியர், அதிகாரிகளிடம் அடிக்கடி காட்டுவதால் ஆட்சியர் களாக உள்ளவர்கள் இந்த மாவட் டத்தை விட்டுச் சென்றாலே போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டதாக அலுவலர்கள் கூறுகின்றனர்.