சென்னை: தமிழகத்தில் புதிதாக 4,000 மருத்துவப் பணியாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.6 கோடியே 17 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான புதிய செவிலிய குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அடிக்கல் நாட்டி வைத்தார். இதனைத் தொடர்ந்து பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், நோயாளிகளிடம் மருத்துவமனை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி எஸ்.கல்யாணசுந்தரம், மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏ எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் அதிகாரிகள் பங்கேற்று, ரத்த அழுத்தம் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, கபிஸ்தலம் வட்டார ஆரம்பச் சுகாதார நிலையத்தில் புதியதாக கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பைத் திறந்து வைத்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது: “விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் மனிதாபத்தோடு முதல்வர் நிவாரணம் அளித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்தவர்களும் நிவாரணம் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கியதை கொச்சைப்படுத்துவது என்பது,எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு அழகானது அல்ல.
எத்தனால் விலை அதிகம் என்பதால் கள்ளச் சாராயம் காய்ச்சும் நபர்கள், குறைந்த விலையிலான மெத்தனாலை பயன்படுத்தியுள்ளனர். இதனை அதிகமாகப் பயன்படுத்தும் போது, உயிரிழப்புகளை உருவாக்கும். இதனைத் தொடர்ந்து எத்தனால் மற்றும் மெத்தனால் விநியோகம், விற்பனை, உற்பத்தி, அதன் பயன்பாடு ஆகியவற்றைக் கண்காணிக்கவும். வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறையினர் அனைவரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
இந்தப் பிரச்சனைக்கு முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என சில அரசியல் தலைவர் கூறுகிறார்கள். அப்படி என்றால், முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் போன்றவர்கள் எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும். கடந்த காலங்களில் கொடநாட்டில் நடந்த 5 கொலை, தற்கொலைகளுக்கு, பழனிச்சாமி எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும். பழனிச்சாமி அடுத்த முறை பேசும் போது கவனமுடன் பேச வேண்டும்.
இதுபோன்ற விஷயங்களில் எடுத்தோம், கவுத்தோம் என அரசியல் தலைவர்கள் பேசுவது முறையல்ல. கிராமங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது குறித்து, அப்பகுதி மக்கள் தைரியத்துடன் போலீஸாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் அளிக்கும் மனநிலையை பெற வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் தன்னார்வ அடிப்படையில், இது போன்ற குற்றச் செயல்களை தடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
மேலும், சுகாதாரத் துறையில் 4,308 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, துறை வாரியாக பணி நியமனங்கள் முடிவு பெற்று, அவர்கள் பணியில் சேர்ந்த வண்ணம் உள்ளார்கள். இதேபோல் 1021 மருத்துவர் பணிக்கும், 900 மருந்தாளுநர் பணிக்கும், இன்னும் 10 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி, தேர்வு பெற்றவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். நிகழாண்டு நிதி நிலை அறிக்கையில் கூறியது போல் புதிதாக 4,000 மருத்துவ பணியாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 38 வருவாய் மாவட்டங்களும், 45 சுகாதார மாவட்டங்களும் உள்ளன. விரைவில் கும்பகோணம், திருவள்ளூர், கடலூர் ஆகியவைகள் புதிய துணை சுகாதார மாவட்டங்களாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.