விழுப்புரம்/ செங்கல்பட்டு: தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. முதல்வர் அறிவித்தபடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள், சிகிச்சை பெறுவோருக்கு ரூ.50 ஆயிரத்தை அமைச்சர்கள் நேரில் வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் 13 பேர் ஏற்கெனவே உயிரிழந்தனர். இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திண்டிவனம் கோவடிகிராமத்தை சேர்ந்த சரவணன் (55) என்பவர் நேற்று உயிரிழந்தார்.
இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒரே குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட 5 பேர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், சித்தாமூர் புத்தூர் பகுதியை சேர்ந்த ஜம்பு, கயப்பாக்கம் சங்கர், பெருங்கரணை முத்து ஆகிய 3 பேர்நேற்று உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிவாரண உதவிகளை அமைச்சர்கள் நேற்று வழங்கினர்.
மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் 13 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அவர்களது வீடுகளுக்கே சென்று அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் வழங்கினர்.
பொன்முடி கூறியபோது, ‘‘கடந்த அதிமுக ஆட்சியிலும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரத்தி,கடலூர் மாவட்டம் ஆலம்பாக்கத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன’’ என்றார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் காசோலைகளை அமைச்சர்தா.மோ.அன்பரசன் வழங்கினார். ‘‘எதிர்க்கட்சிகள் இதில் அரசியல்செய்கின்றன’’ என்று அவர் கூறினார். வந்தவாசியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரணம், திருவண்ணாமலை ஆட்சியரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.