தமிழகம்

75 ஆண்டு கோரிக்கையின் பலனாக கோட்டூர் மலைக் கிராமத்துக்கு சாலை அமைக்க அனுமதி: தருமபுரி எம்.பி-க்கு சிறப்பான வரவேற்பு

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கோட்டூர் மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்க அனுமதி கிடைத்துள்ள தகவலை தெரிவிக்கச் சென்ற தருமபுரி எம்பி செந்தில்குமாருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பென்னாகரம் ஒன்றியம் வட்டுவனஅள்ளி ஊராட்சியில் கோட்டூர் மலை கிராமம் அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மலைக் கிராமத்துக்கு இதுவரை வாகனங்கள் செல்லும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று மலை அடிவாரத்தை அடைந்த பிறகே வாகனங்களில் மக்கள் பயணிக்க முடியும். மலையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாதம்தோறும் கழுதைகள் மீதுதான் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. அதே போல, மலையில் விளையும் தானியங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய கழுதைகள் மூலமேஅடிவாரத்துக்கு கொண்டு வருகின்றனர்.

மலைக்கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இங்குள்ள மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கோட்டூர் மலை கிராமத்துக்கு சாலை அமைக்க அனுமதி பெற தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.

அதன் பலனாக, மத்திய வனத்துறை, சுற்றுச் சூழல் துறை, பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்ட 6 துறைகளிடம் அனுமதி கிடைத்தது. அடிவாரம் முதல் மலை உச்சி வரை அகன்ற சாலை அமைக்க மத்திய அரசிடம் இருந்து 2 தினங்களுக்கு முன்பு ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை கோட்டூர் மலைக் கிராம மக்களிடம் நேரில் தெரிவிக்க அனுமதி கடிதத்துடன் நேற்று மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கிராமத்துக்கு நடந்து சென்றார். இதையறிந்த அந்த கிராம மக்கள் மேள, தாளம் முழங்க மக்களவை உறுப்பினருக்கு பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் எம்பி செந்தில்குமார் பேசும்போது, ‘சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் கோட்டூர் மலைக் கிராமத்துக்கு சாலை வசதிக்கு அனுமதி கிடைத்துள்ளது.

பிரசவம் போன்ற தேவைகளுக்காக கர்ப்பிணி பெண்களையும், பாம்பு போன்ற விஷ உயிரினங்களால் கடிபட்டவர்களையும் டோலி கட்டித் தான் அடிவாரம் வரை தூக்கிச் செல்லும் நிலை இருந்தது. இதற்கெல்லாம் இனி தீர்வு ஏற்பட இருக்கிறது. விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்’ என்றார்.

நிகழ்ச்சியில், வட்டுவன அள்ளி ஊராட்சித் தலைவர் மாதம்மாள், திமுக கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், முருகேசன், சபரி, மேற்கு மாவட்ட இளைஞர் அணி மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT