சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு நேற்று அதிகாலை 4:35 மணிக்கு 12 பெட்டிகள்கொண்ட மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயிலை ஓட்டுநர் தில்லிபாபு(40) என்பவர் ஓட்டினார். 100-க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் பயணித்தனர்.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அதிகாலை 5:20 மணி அளவில்ரயில் வந்தது. பின்னர், அங்கிருந்து ரயில் புறப்படும்போது, திடீரென 4-வது மற்றும் 5-வது பெட்டி இணைப்பில் உள்ள கப்ளிங் உடைந்து கழன்றது. இதனால், ரயிலின் ஒரு பகுதி 40 அடிகள் தொலைவுக்கு ஓடி தனியாக நின்றது.
ரயிலின் அதிர்வை வைத்து ஏதோதவறு நடந்திருக்கும் என நினைத்தஓட்டுநர், ரயிலை பாதுகாப்பாக நிறுத்தினார். இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, அந்த வழியாக செல்லவேண்டிய மின்சார ரயில்களின்சேவை நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், ரயில்வேபணியாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். பழுதடைந்த ரயில் தாம்பரம் ரயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மின்சார ரயில் சேவை ரத்து காரணமாக, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. காலையில் பணிக்கு செல்வோர் மற்றும் வெளியூர் ரயில்களில் வந்து மின்சார ரயில்களில் பயணிப்போர் மிகவும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, தற்காலிக ஏற்பாடாக, புதுச்சேரி செல்லும் விரைவுரயில், அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், 4-வது பாதை வழியாக செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மின்சாரரயில் பெட்டிகளுக்கு இடையேபயன்படுத்தப்படும் கப்ளிங் உடைந்ததால், ரயில் பெட்டிகள் கழன்றுசென்றது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வுநடத்தி வருகின்றனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவத்தால் பயணிகள் அச்சப்பட வேண்டியதில்லை. ஏனெனில், ரயில் பெட்டிகள் கழன்று செல்லும்போது, அந்தரயில் பெட்டிகளின் சிக்னல் செயலிழந்து தானாகவே நிற்கும் வகையில் ஒரு ‘சிஸ்டம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த உடனே, மாற்று வழியில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. காலை 7:40 மணி முதல் இந்த தடத்தில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.