தமிழகம்

சென்னையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3,991 மெகாவாட் மின்சாரம் நுகர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 3,991 மெகாவாட் மின்சாரத்தை நுகர்வோர் உபயோகித்துள்ளனர். தமிழகத்தில் 2.67 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். தினசரி மின் தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட். இதில் விவசாயத்தின் பங்கு2,500 மெகாவாட். கோடைக்காலத்தில் மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட்டாக குறையும்.

நடப்பாண்டு கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்தசில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிக்கத்துள்ளது. இதனால் தினசரிமின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.

மேலும், விவசாயப் பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால், அந்தப்பிரிவில் மட்டும் தேவை 727 மெகாவாட் அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி தினசரி மின் நுகர்வு முதல்முறையாக 17,584 மெகாவாட்டாக அதிகரித்தது. இதற்கு முன் அதிகபட்சமாக 2022ஏப். 29-ம் தேதி 17,563 மெகாவாட் அளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது.

விவசாயத்துக்கான 18 மணி நேரமின் விநியோகம் மற்றும் பள்ளிகளில்பொதுத் தேர்வுகள் நடைபெற்றதால் மின்சாரத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தது.

இதனால், முன் எப்போதும் இல்லாத அளவாக கடந்த மாதம்16-ம் தேதி தினசரி மின் நுகர்வு 18,053 மெகாவாட்டாக அதிகரித்தது. அதையும் தாண்டி கடந்த 7-ம் தேதி 18,252 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த சிலநாட்களாக சென்னையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் சென்னையின் மின் நுகர்வு 3,991 மெகாவாட்டாக உயர்ந்து, புதிய சாதனை படைத்தது.

அமைச்சரின் ட்விட்டர் பதிவு: இது தொடர்பாக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிதனது ட்விட்டர் பதிவில், "சென்னையில் மே 15-ம் தேதி 3,991மெகாவாட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இதற்கு முந்தைய அதிகபட்ச நுகர்வு 3,778 மெகாவாட்டாகும்.

யூனிட்டுகள் அடிப்படையில் சென்னையில் நேற்று முன்தினம் 84.51 மில்லியன் யூனிட் மின்சாரம்பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்தமாதம் 21-ம் தேதி 84.23 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT