சென்னை: தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற விரும்பும் பணியாளர்களிடமிருந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை விண்ணப்பம் கோரியுள்ளது.
தலைமைச் செயலக பணியாளர்கள் ஓய்வுபெறும் வரை சென்னைதலைமைச் செயலகத்திலேயே பணியாற்ற வேண்டியுள்ளது. தலைமைச் செயலக பணியாளர்களில் பெரும்பாலானோர் சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்துவருவதால் உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு வருவதும் பணி முடிந்து வீட்டுக்கு திரும்புவதும் பெரிய சவாலாக உள்ளது.
எனவே, தாடண்டர் நகர் வீட்டுவசதி வாடகை குடியிருப்பில் தலைமை செயலக பணியாளர்களுக்கு 25 சதவீத சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.