காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் கொதுகை ஏரியில் விதிகளை மீறி அதிக ஆழத்துக்கு மண் எடுக்கப்படுவதாக கூறி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

காஞ்சிபுரம் முசரவாக்கம் கொதுகை ஏரியில் விதிகளை மீறி மண் எடுப்பதாக லாரிகள் சிறைபிடிப்பு: மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் கொதுகை ஏரியில் விதிகளை மீறி அதிக ஆழத்துக்கு மண் எடுக்கப்படுவதாக கூறி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மண் எடுப்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

முசரவாக்கம் கொதுகை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மேலும் ஏரியில் உள்ள மண்ணை அப்புறத்தப்படுத்தி தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். நீர்வள ஆதாரத் துறையும் இதற்கான நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது. அதனடிப்படையில் இந்த ஏரியில் 250 மீட்டர் நீளத்துக்கும் 126 மீட்டர் அகலத்துக்கும், 3 அடி ஆழத்துக்கும் சுமார் 5,000 லோடு மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஏரியில் பல பொக்லைன் இயந்திரங்களை வைத்து விதிகளை மீறி பல அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டு வருகிறது. ஏரியில் அதிக அளவு ஆழத்துக்கு மண் எடுப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்தப் பகுதி விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான லாரிகள் இந்த ஏரியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு தினம்தோறும் அந்த கிராமத்தின் வழியாக அதிக வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தங்கள் பகுதி வழியாக செல்லும் லாரிகளை நேற்று சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் கிராமங்களில் இருந்து நூற்றுக் கணக்கான லாரிகளில் மண் எடுத்துச் செல்கின்றனர். இதில் ஒரு சிறு பகுதியை எங்கள் சாலையின் ஓரம் பள்ளமான பகுதிகளில் கொட்ட வேண்டும். அதிக வேகமாக செல்லும் லாரிகளை முறைப்படுத்தி அனுப்ப இந்த கிராமத்தில் இருந்து 5 நபர்களை பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதனால் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் பேசி முடிவு செய்தவதாகவும் தற்போது லாரியை விட வேண்டும் என்றும் லாரி ஓட்டுநர்கள் வலியுறுத்தினர். பின்னர் சிறிது நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின்னர் லாரிகள் விடுவிக்கப்பட்டன.

இந்தப் பகுதியில் லாரிகள் அதிகம் செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதுடன், ஏரியில் விதிகளை மீறி மண் எடுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது ஏரியில் எவ்வளவு மண் எடுக்கப்படுகிறது என்பதை கண்காணித்து வருகிறோம். உத்தரவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மண் எடுக்க கூடாது என்பதை வலியுறுத்துவோம் என்றனர்.

SCROLL FOR NEXT