தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை மற்றும் கல்விக் கட்டண வசூலை முறைப்படுத்த குழு அமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த எம்.சுவாமிநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர ஒரு இடம் ரூ.1 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. எம்.பி.பி.எஸ் சேருவோர், படிப்பை முடிப்பதற்குள் மேலும் ரூ.1 கோடி செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் பெரும் தொகையை வசூலிக்கின்றனர். மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு வெறும் கண்துடைப்பாகவே நடைபெறுகிறது.
மதிப்பெண் தகுதி, இடஒதுக்கீடு போன்றவற்றின் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்பும் வகையில் அரசின் கல்விக் கொள்கை இருக்க வேண்டும். மாறாக நன்கொடை என்ற பெயரில் பெருமளவு கறுப்புப் பணத்தைப் பெற்றுக் கொண்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் தனியாரால் நிரப்பப்படுகின்றன.
ஆகவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அந்தக் கல்லூரிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் ஒரே மாதிரியானதாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதற்காக ஒரு குழுவை அமைக்கவும், மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நான்கு வார காலத்துக்கு ஒத்தி வைத்தனர்.