விருதுநகர்: பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து வந்த பேருந்து ஓட்டுநர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததால், சாலையோர ஓடையில் பேருந்து பாய்ந்தது. இந்த சம்பவத்தில், பேருந்தில் இருந்த மாணவர்கள் உட்பட 66 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருநெல்வேலி அருகே உள்ள கூட்டப்புளியில் புனித ஜோசப் ஆர்.சி. தேவாலயம் உள்ளது. அப்பகுதியில் உள்ள 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியர் 58 பேரை தேவாலயத்தின் டாரிஸ் அறக்கட்டளை மூலம் பாதிரியார் ஆல்வின் என்பவர் கடந்த 14-ம் தேதி ஒரு தனியார் பேருந்தில் சுற்றுலா அழைத்துச் சென்றார்.
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி, வைகை அணை போன்ற இடங் களைப் பார்த்துவிட்டு நேற்று அதிகாலை தேனியிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பேருந்தை திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாராயணன் (58) என்பவர் ஓட்டி வந்தார். விருதுநகர்- திருநெல்வேலி சாலையில் ஆர்.ஆர். நகர் அருகே உள்ள அக்ரஹாரப்பட்டியில் பேருந்து சென்றபோது ஓட்டுநர் நாராயணனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனால் பேருந்தை அவரால் தொடர்ந்து இயக்க முடியவில்லை. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் இடது ஓரத்தில் உள்ள இரும்புத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சாலையோரத்தில் உள்ள ஓடைக்குள் இறங்கி நின்றது. ஓட்டுநர் நாராயணனும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தகவலறிந்த வச்சக்காரப்பட்டி போலீ ஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஓட்டுநர் நாராயணனின் உடலை மீட்டு, விருது நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பேருந்தில் வந்த 58 மாணவ, மாணவிகள், உடன் வந்த பணியாளர்கள் 8 பேர் என 66 பேரும் மீட்கப்பட்டு மற்றொரு பேருந்தில் திருநெல்வேலி அனுப்பி வைப்பட்டனர். இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.