கோப்புப்படம் 
தமிழகம்

மெரினா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிமுக இடையீட்டு மனு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரை கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரை அருகே கடலில் ரூ.81 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கியுள்ளது.

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே மீனவர்கள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நினைவு சின்னம் அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சார்பில் வழக்கறிஞர் ஆனந்த கண்ணன் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பேனா நினைவு சின்னம் அமைப்பது கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்குள் வருவதால் கடல் வளமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

கூவம் ஆறும், கடலும் சந்திக்கும் முகத்துவாரப் பகுதியில் இறால், நண்டுகள் அதிகம் கிடைக்கும்.பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட்டால் அந்த வளம் முற்றிலுமாக தடைபடும்.

இந்த திட்டமே மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பதாகும். இத்திட்டத்தை செயல்படுத்தும் முன்பாக எந்தவொரு நிலையான வளர்ச்சி பணிகளையும் கருத்தில் கொள்ளவில்லை. நாட்டுக்கு மிகவும் அவசியமானது, அத்தியாவசியமானது என்றால் மட்டுமே கடலுக்குள் கட்டுமானங்களை மேற்கொள்ளலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

எனவே, மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

கையெழுத்து இயக்கம்

இதற்கிடையே, மெரினா கடல் பகுதியில் அரசு சார்பில் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு எதிராக மீனவ அமைப்புகள் சார்பில் சென்னை ராயபுரத்தில் நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ஒரு லட்சம் மீனவர்களிடம் கையெழுத்து பெற்று, ஆளுநரிடமும், மத்திய அரசிடமும் வழங்க உள்ளனர். கடலின் நடுவில் பேனா சின்னம் வைப்பதை மீனவர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் விரும்பவில்லை. தேவைப்பட்டால், திமுக அறக்கட்டளை பணத்தில் அறிவாலத்தில் பேனா சின்னத்தை அமைத்துக் கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT