சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான சென்னை, கோவையில் உள்ள ரூ.457 கோடி அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த லாட்டரி விற்பனையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்டின் முக்கிய புள்ளியாகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் மார்ட்டின், சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று வருமானம் ஈட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
சிபிஐ விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 2019-ம்ஆண்டு வருமான வரித் துறை அதிகாரிகள் மார்ட்டினுக்குச் சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம், நகை, சொத்து ஆவணங்கள் உட்பட பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.
இதனை ஆய்வு செய்தபோது, கடந்த 2009-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதி முதல் 2010-ம் ஆண்டு ஆக.31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அந்தபணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மார்ட்டின் முதலீடு செய்தி ருப்பதையும் வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் மார்ட்டின், அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்ததையடுத்து, அமலாக்கத்துறை இந்த வழக்கில் இறங்கி விசாரணையை தொடங்கியது. இதில், மார்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஆகியோர் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கட்டங்களாக, லாட்டரிஅதிபர் மார்ட்டின் நடத்தி வந்த நிறுவனங்கள், அவருக்குச் சொந்தமான இடங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, மார்ட்டின் தொடர்புடைய ரூ.451.07 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை ஏற்கெனவே முடக்கியுள்ளது. இந்நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லாட்டரி அதிபர்மார்ட்டின், அவரது மருமகன், குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் கடந்த 11-ம் தேதி சோதனை நடத்தினர்.
குறிப்பாக, கோவையில் மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் உள்ளமார்ட்டினின் அலுவலகம், கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும், சென்னையில் ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மார்ட்டினின் மருமகன் வசிக்கும் வீடு, வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர்.
மே 11 மற்றும் 12 என 2 நாட்கள் நடைபெற்ற இச்சோதனையில் சட்டவிரோத பண பரிவர்த்தனையின் மூலம் பல்வேறுவகையில் மார்ட்டின் முதலீடு செய்த ஆவணங்களையும், பல கோடி மதிப்புள்ள நகை, பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். கைப்பற்ற ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், மார்ட்டினின் சொத்துகளை நேற்று முடக்கி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் பெற்ற ரூ.157.70 கோடி அசையும்சொத்துகள், ரூ.299.16 கோடி அசையாசொத்துகள் என மொத்தம் ரூ.456.86 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள் ளன என்று தெரிவித்துள்ளனர். மேலும், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.