திருச்சி: ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் நேற்று அதிகாலையில் குளிக்கச் சென்ற வேத பாடசாலை மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கினர். அவர்களில் ஒருவர் உயிருடனும், மற்றொருவர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். 2 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் மேலவாசல் பட்டர்தோப்பு பகுதியில் ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலம் வேத பாடசாலை செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறையையொட்டி இங்கு 50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி வேதபாடங்களைப் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு தங்கி பயிலும் ஈரோடு மாவட்டம் நசியனூர் வலரசம்பட்டியைச் சேர்ந்த, பிளஸ் 1 மாணவர் கோபாலகிருஷ்ணன் (17), மன்னார்குடி மேல முதல் தெருவைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் விஷ்ணுபிரசாத்(13), மன்னார்குடி கனகசபை சந்து மேற்கு 4-வது தெருவைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஹரிபிரசாத் (14), ஆந்திர மாநிலம் குண்டூர் சம்பத் நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் கிடாம்பி வெங்கடகிரிதர் சாய் சூர்ய அபிராம் (14) ஆகியோர் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு யாத்ரிக நிவாஸ் எதிரேயுள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர்.
தற்போது, முக்கொம்பு பகுதியில் நடைபெறும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக காவிரியில் திறக்க வேண்டிய நீரின் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக கொள்ளிடம் ஆற்றில் 1,900 கனஅடி நீர் திறந்து விடப்பட்டிருந்தது.
இதனால் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்திருந்தது. இதையறியாமல் மாணவர்கள் 4 பேரும் குளிப்பதற்காக கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கினர். அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் விஷ்ணுபிரசாத், அபிராம், ஹரிபிரசாத் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை கோபாலகிருஷ்ணன் காப்பாற்ற முயற்சித்தபோது, அவரும் ஆழமான பகுதிக்குள் சிக்கினார். இவர்களின் கூச்சல்கேட்டு அப்பகுதியிலிருந்தவர்கள் ஓடிச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், கோபாலகிருஷ்ணன் உயிருடன் மீட்கப்பட்டார்.
தீயணைப்பு வீரர்களும், ஸ்ரீரங்கம் போலீஸாரும் அங்குவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷ்ணுபிரசாத் சடலமாக மீட்கப்பட்டார். ஹரிபிரசாத், அபிராம் ஆகியோரை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. இதற்காக முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.