நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில், வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், 4 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். கோவை மண்டல ஐஜி, டிஐஜி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையம் சரளைமேடு கிராமத்தில் முத்துசாமி என்பவருடைய வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலை உள்ளது. இங்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகையை உடைத்த மர்மநபர்கள், மண்ணெண்ணெய் நனைக்கப்பட்ட துணியில் தீ வைத்து உள்ளே வீசியுள்ளனர்.
இதில், கொட்டகையில் தூங்கிக் கொண்டு இருந்த ராகேஷ்(24), சஜிராம்(23), யஸ்வந்த் (24), கோகுல் (23) ஆகியோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தை நாமக்கல் எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டது. தீ பற்ற வைத்த துணி மாதிரிகளை, தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
கோவை மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். நாமக்கல் எஸ்.பி. கலைச்செல்வன், ஈரோடு எஸ்.பி. சசிகுமார், சேலம் எஸ்.பி. சிவக்குமார் மற்றும் 6 டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு: பதற்றத்தைத் தணிக்கும் வகையில், கோவை, திருப்பூர், கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டிஐஜி விஜயகுமார் கூறும்போது, ‘சிமென்ட் ஷீட் போடப்பட்ட கொட்டகையில் தூங்கிக் கொண்டு இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த துணியை வீசியுள்ளனர். குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் பிடித்து விடுவோம்’ என்றார்.
குழு அமைத்து கண்காணிப்பு: இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங், கரூர் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியது: வருவாய்த்துறையைச் சேர்ந்த 18 பேர் அடங்கிய 6 குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அமைதி நிலை ஏற்பட கிராம மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, வடகரையாத்தூர், கரப்பாளையம் உள்ளிட்ட கிராம மக்களிடம் தொடர் தீ வைப்பு சம்பவங்கள் குறித்தும், இரு தரப்பினரிடையே சுமுக நிலை எட்டுவது குறித்தும் ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
பெண் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: நாமக்கல் மாவட்டம் கரப்பாளையத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 28 வயதான பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என புகார் எழுந்தது. இதன் எதிரொலியாக, ஜேடர்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு தொடர்கிறது.
இதனிடையே, டிஜிபி சைலேந்திரபாபு பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.