கோவை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தோல்வியால் பிரச்சினை இல்லை எனவும், அடுத்த முறை வெற்றிபெறுவோம் எனவும் பாஜக நிர்வாகியும், நடிகையுமான நமீதா தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ‘பாஜக குடும்ப பிரிமியர் லீக்’ கிரிக்கெட் போட்டி மதுக்கரை பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை நடிகையும், பாஜக பிரமுகருமான நமீதா கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பாஜக மட்டும்தான் கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைக்க இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பாஜக நன்கு முன்னேறி வருகிறது. அதன் காரணமாகத்தான் எங்கு சென்றாலும் பாஜக பெயர் ஒலிக்கிறது. கர்நாடக தேர்தல் தோல்வி பெரிய பிரச்சினை இல்லை. அடுத்தமுறை வெற்றி பெறுவோம். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி ஆகியோர் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது”என்றார்.