சென்னை: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று தொழிற் சங்கங்களின் தேசியமாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்திந்திய சாலைப் போக்குவரத்து பணியாளர் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில், டெல்லியில் நேற்று தொழிற் சங்கங்களின் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, டியுசிஐ, டிடிஎஸ்எஃப் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பெட்ரோல், டீசல் மீது 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு உயர்த்தப்பட்ட கலால் வரியை ரத்து செய்வதுடன், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தைத் திரும்பப் பெற்று, பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்து, புதிய கொள்கையை வரையறுக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். அனைத்து அமைப்புசாரா போக்குவரத்துத் தொழிலாளர்களையும், தொழிலாளர் நலத் துறையின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, அவற்றை வலுப்படுத்த வேண்டும். இதற்காக 1:2 என்ற அடிப்படையில், மத்திய, மாநில அரசுகள் மூலதனப் பங்களிப்பு வழங்க வேண்டும்.
மாநிலங்களில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் கடன்களையும், ஒரே தவணையில் செலுத்தி முடிக்க வேண்டும். ஒரு லட்சம் பேருந்துகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
டீசல், உதிரி பாகங்கள் போன்றவற்றுக்கான விற்பனை வரி, கலால் வரி ஆகியவற்றில் இருந்துபோக்குவரத்துக் கழகங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சிறப்பாகப் பராமரிக்கப்படும் போக்குவரத்துக் கழகங்களை, வாகனஅழிப்புக் கொள்கையை ஏற்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. போக்குவரத்துக் கழகங்களை, சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட அனுமதியளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.