சென்னை: திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் எந்த செயலிலும் விசிக ஈடுபடாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட அளவில் பெண்களுக்கு 10 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 110 பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதையொட்டி, சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சி தலைமையகத்தில், மாநிலச் செயலாளர் இரா.நற்சோனை உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள், விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: கர்நாடகத்தில் பாஜகவை மக்கள் விரட்டியடித்துள்ளனர். வரும் நாடாளு மன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகள் காங்கிரஸோடு இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் அதிமுகவின் தோளில் ஏறி பாஜக சவாரி செய்தாலும், அவர்களால் ஒரு அங்குலம்கூட முன்னேற முடியாது.
இப்போதே அதிமுக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பாஜகவோடு சேர்வதால் அதிமுக தேய்மானம் அடைய வாய்ப்பிருக்கிறதே தவிர, வலிமை பெற வாய்ப்பில்லை. இது அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விட முடியாத அளவுக்கு திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் வலிமையோடு இருக்கின்றன.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியே நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவும், எதிர்க் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான தளமாகவும் அமையும் என நம்புகிறேன். திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்தும் எந்த செயலிலும் விசிக ஈடுபடாது. யாரையும் ரகசியமாகச் சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. தொகுதி மாற இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது.
பாஜக தனது அறிவிப்புகளை செயல்படுத்தியது கிடையாது. ஊழல் பட்டியல் அறிவிக்கிறோம் எனக் கூறி சொத்து பட்டியலை வெளியிட்டார்கள். போலீஸ் அதிகாரியாகவே அண்ணாமலை இன்றும் உளவு வேலையை செய்கிறார்.தமிழகத்தில் பாஜகவின் எதிர் காலத்தை அண்ணாமலையே யூகம் செய்து கொள்ள வேண்டும்.
அரசின் நிறைகளைப் பாராட்டுகிறோம். குறைகளை சுட்டிக் காட்டுகிறோம். இந்நிகழ்வில், கட்சியின் முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன், தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.