தமிழகம்

கோடை மழை தொடர்ந்து பெய்ததால் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் நிரம்பியது

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் நிரம்பியது.

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் செல்வதற்காக வைகை ஆற்றிலிருந்து பனையூர் கால் வாய் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கால்வாய் அடை பட்டிருந்ததால், தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வராமல் இருந்தது. இந்நிலையில் பொதுப்பணித் துறை சார்பில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாநகராட்சி சார்பில் பனையூர் கால்வாய் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து 2020-ம்ஆண்டிலிருந்து தெப்பக்குளத்துக்கு தண்ணீர் தடையின்றி வரத் தொடங்கியது. முன்பு தண்ணீரின்றி கிரிக்கெட் விளையாடும் மைதானமாக இருந்த தெப்பக்குளம், தற்போது ஆண்டு முழுவதும் நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்தில் கடும் வெயில் அடித்தது.

கால்வாயில் தண்ணீர் வரத்தின்றி தெப்பக்குளத்தில் நீர்மட்டம் வேகமாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், அண்மையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தற்போது நீர்மட்டம் உயர்ந்து தெப்பக்குளம் நிரம்பிவிட்டது.

SCROLL FOR NEXT