முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம் 
தமிழகம்

தூத்துக்குடி| கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தூத்துக்குடி அருகே கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், புதூர் குறுவட்டம், சிவலார்பட்டி கிராமம், தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன்கள் மகேஸ்வரன் (12), அருண்குமார் (9) மற்றும் சுதன் (7) ஆகியோர் (12.5.2023) அன்று மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்", என்று அவர் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே உள்ளே சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் மகேஸ்வரன் அக்கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பும், அவரது தம்பி அருண்குமார் 4ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள் இருவருடன் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகன் சுதன் ஆகிய மூன்று பேரும் கோடை விடுமுறையில் வெள்ளிக்கிழமை மாலை ஒன்றாக விளையாடியுள்ளனர்.

விளையாட சென்ற 3 சிறுவர்களும் மாலையில் வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் சிறுவர்களின் சைக்கிள் அந்த ஊரில் கண்மாய் அருகே நின்றிருந்ததை அறிந்து அங்கு சென்று பார்த்தபோது, சிறுவர்கள் மூவரும் கண்மாயில் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT