தமிழகம்

குடிநீர் வழங்கல் - கழிவுநீரகற்று வாரியத்தில் ரூ.561 கோடியில் 14 திட்ட பணிகளை முதல்வர் தொடங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.561 கோடியே 26 லட்சம் செலவிலான 14 முடிவுற்ற திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். தொடர்ந்து ரூ.201 கோடி மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை கொடுங்கையூரில் ரூ.170 கோடியே 97 லட்சம் செலவில் நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட தொடர் தொகுதி உலை முறையில் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம். அம்பத்தூர் மண்டலம், வார்டு-89 மற்றும் வார்டு-92-ல்முகப்பேர் சாலையில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் புதியபாதாள சாக்கடை அமைக்கும் வகையில் ரூ.2 கோடியே 62 லட்சம்செலவில் கழிவுநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணி.

அம்பத்தூர் மண்டலம், வார்டு-93-ல் பாடிக்குப்பம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் கழிவுநீர் உந்துநிலையம் அமைத்தல் மற்றும் கழிவுநீர் உந்துகுழாய் அமைக்கும் பணி. நெசப்பாக்கத்தில் ரூ.74 கோடியே 12 லட்சம் செலவில் நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட தொடர் தொகுதி முறை புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம்.

கழிவுநீர் குழாய்கள்: சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ், எம்ஜிஆர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக ரூ.2 கோடியே 23 லட்சம் செலவில் கோடம்பாக்கம் மண்டலம் எம்ஜிஆர் நகர் கால்வாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள்.

வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.51 கோடியே 98 லட்சம் செலவில் வள்ளியம்மை நகர் மற்றும் என்.டி.பட்டேல் ரோடு ஆகிய பகுதிகளுக்கான கழிவுநீர் குழாய்கள், கழிவுநீர் விசைக்குழாய்கள் மற்றும் கழிவுநீரிறைக்கும் நிலையம் அமைக்கும் திட்டம்.

வளசரவாக்கம் மண்டலம், வார்டு-149 ராமகிருஷ்ணா நகர் பகுதியில் ரூ.41 கோடியே 97 லட்சம் செலவில் 24 மணி நேரமும் சீரான குடிநீர் விநியோகிக்கும் திட்டம். வளசரவாக்கம் மண்டலம், போரூர், வார்டு எண்.151 மற்றும் 153-க்குட்பட்ட பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.38 கோடியே 29 லட்சம் செலவில் விரிவான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்.

பாதாள சாக்கடை திட்டம்: வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம் தமிழ் நகர் மற்றும் ஆலங்குளம் பகுதிகளுக்கு ரூ.32 கோடியே 29 லட்சம் செலவில் விரிவான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம், ஆலந்தூர் மண்டலத்தில், ரூ.19 கோடியே 98 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம், ரூ.22 கோடியே 40 லட்சம் செலவில் விரிவான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம், அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக ரூ.4 கோடியே 18 லட்சம் செலவில் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் கழிவுநீர் உந்து குழாய் அமைக்கும் பணிகள், பெருங்குடி மண்டலம், உத்தண்டி பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.24 கோடியே 85 லட்சம் செலவில் விரிவான குடிநீர் வழங்கும் திட்டம், சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் ரூ.73 கோடியே 61 லட்சம் செலவில் விரிவானகுடிநீர் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைத்தார்.

ராயபுரம் மண்டலத்தில், ரூ.22 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் 750 மி.மீ. விட்டமுள்ள கழிவுநீர் உந்து குழாய்கள் அமைக்கும் பணிகள். ஆர்.கே. நகர் மண்டலத்தில் ரூ.84 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 1000 மி.மீ. விட்டம் கொண்ட கழிவுநீர் உந்துகுழாய்கள் அமைக்கும் பணிகள், அம்பத்தூர் மண்டலத்தில் விடுபட்ட தெருக்களுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டங்கள், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் கீழ், கோடம்பாக்கம் மண்டலத்தில் கழிவுநீர் குழாய்கள் விரிவாக்கும் திட்டங்கள், பாதாள சாக்கடை அமைக்கும் திட்டங்கள், அடையாறு, தி.நகர் மண்டலங்களில் கழிவுநீர் உந்துகுழாய் அமைத்தல், பாதாளச் சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் என ரூ.201 கோடி மதிப்பிலான 9 திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT