சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நிர்வாகிகளும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பணிநியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டது.
இந்நிலையில், இந்த அரசாணையை ரத்துச்செய்யக்கோரி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்களும் சென்னைடிபிஐ வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நடைபெறும் இந்த தொடர்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, பணிநியமனத்துக்கு போட்டித்தேர்வு நடத்தும் முடிவை கைவிடும்வரை போராட்டம் தொடரும் என்று அச்சங்கத்தின் மாநில தலைவர் கபிலன்சின்னச்சாமி, துணை தலைவர்மு.வடிவேலன் அறிவித்துள்ளனர்.
போராட்டத்தையொட்டி டிபிஐ வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு கடந்த 4 நாட்களில் 38 பேர் மயங்கினர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று4-வது நாளாக நீடித்தது. இதற்கிடையே, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சி நிர்வாகிகள் டிபிஐ வளாகத்துக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர்திருமாவளவன் எம்பி, அமமுகசார்பில் அதன் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர்சி.ஆர்.சரஸ்வதி, அமைப்புச் செயலாளர் ம.கரிகாலன் உள்ளிட்டோர் நேரில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.