தமிழகம்

வேட்டி கட்டி கிரிக்கெட் கிளப்பில் நுழையும் போராட்டம்: தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் கைது

செய்திப்பிரிவு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்புக்குள் வேட்டி கட்டி நுழைய முயன்ற தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் 30 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பில் நூல் வெளியீட்டு விழா ஒன்று வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்கச் சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, ஜி.ஆர்.சுவாமி நாதன் ஆகியோர் வேட்டி கட்டி யிருந்ததால் கிளப்புக்குள் அனும திக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதைக் கண்டித்து, தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் ஞாயிறு காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் வேட்டி கட்டியபடி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். வேட்டியுடன் கிரிக்கெட் கிளப்புக்குள் நுழைய முயன்ற 30 பேரையும் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விதிமுறைகளைத் திருத்தாவிட்டால்..

இதுகுறித்து கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறும்போது, ‘‘சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் கிளப், ஜிம்கானா கிளப், போட் கிளப், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் ஆகியவற்றில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட விதிமுறைகளே இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதைக் காரணம் காட்டி, வேட்டி கட்டி வந்த உயர் நீதிமன்ற நீதிபதி, மூத்த வழக்கறிஞர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த கிளப்கள் அனைத்தும் தங்கள் விதிமுறைகளை திருத்த வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து கிளப்களிலும் வேட்டி கட்டி நுழையும் போராட்டம் நடத்துவோம்’’ என்றார். போராட் டத்தில் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் எம்.எஸ் சண்முகம், மாநிலப் பொருளாளர் அக்ரம்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT