தமிழகம்

சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை குத்தகைதாரர்களிடம் இருந்து மீட்டு கோயில் வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: வாடகை செலுத்தாததால் சுந்தரேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைதாரர்களிடம் இருந்து மீட்டு ஒப்படைக்க காஞ்சிபுரம் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் உள்ள சுந்தரேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை, கோவூர்வேளாண் கூட்டுறவு சங்கம் குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்வதற்காக உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வழங்கியது.

இந்நிலையில், வாடகை செலுத்தாததால் நிலத்தை காலி செய்து கோயில் வசம் ஒப்படைக்க வேண்டுமென கடலூர் வருவாய் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சங்க உறுப்பினர்களான தாந்தோனி, திருநீலகண்டன் உட்பட 20 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில், "எங்களுக்கும், கூட்டுறவு சங்கத்துக்கும் இடையே மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டதால் உறுப்பினர்கள் வழக்குத் தொடர அதிகாரம் இல்லை. ரூ.50 லட்சம் அளவுக்கு குத்தகைத் தொகை நிலுவையில் வைத்துள்ளனர். விவசாயத்துக்கு கொடுத்த நிலத்தைவணிக நோக்கத்தில் பயன்படுத்துகின்றனர்" என தெரிவிக்கப்பட்டது.

வர்த்தக ரீதியாக பயன்பாடு: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் தொடர்ந்து கோயில் நிலத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி பெருந்தொகை சம்பாதித்திருப்பது கண்டனத்துக்குரியது. சில பேராசை பிடித்தவர்கள் வழக்குத் தொடர்ந்து கோயில் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.

2011-ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால உத்தரவும் பெற்றிருக்கக் கூடிய நிலையில், வழக்கு நிலுவையில் இருந்தபோது கூட குத்தகை நிலுவைத் தொகையை செலுத்த முன்வரவில்லை. கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எந்த விதத்திலும் சகித்துக் கொள்ள முடியாது. கோயிலுக்கு மனுதாரர்களால் பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாய் நீதிமன்றம் 2012-ல் பிறப்பித்த உத்தரவை 4 வாரத்தில் நிறைவேற்றி, நிலத்தை கோயில் வசம் காஞ்சிபுரம் ஆட்சியர் ஒப்படைக்க வேண்டும்.

மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு அதிகாரி உதவி யுடன் குத்தகை நிலுவைத் தொகையையும் கோயில் நிர் வாகம் வசூலிக்க வேண்டும். கோயிலுடன் உறுப்பினர்களுக்கு ஒப்பந்தம் இல்லாததால் மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து, வழக்குகளை முடித்து வைக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT